பொதுவாகத் திருமணம், வரவேற்பு, காதணி விழா, மஞ்சள் நீராட்டு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு வந்து செல்லும் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு நிகழ்ச்சி முடிந்து உணவு சாப்பிட்டு விட்டுச் செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை தாம்பூலமாக கொடுப்பார்கள். அதன்பிறகு அந்த தாம்பூல பையில் வெற்றிலை பாக்குடன் சாத்துக்குடி, மாம்பழம் போன்ற பழ வகைகளும், லட்டு உள்ளிட்ட இனிப்புகளையும் தாம்பூல பையில் கொடுப்பார்கள்.
ஆனால், புதுச்சேரியில் வித்தியாசமாக தாம்பூல பையில் மது பாட்டிலைச் சேர்த்துக் கொடுத்துள்ளனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கும், புதுச்சேரி வாணரபேட்டையைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 28 ஆம் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் மணமகள் வீட்டார் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் குவார்ட்டர் மது பாட்டிலும் சேர்த்துக் கொடுத்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை வியப்பில் ஆழ்த்தினர்.
முதலில் பெண்களுக்கும் குவாட்டர் பாட்டிலுடன் தாம்பூலப் பை வழங்கப்பட்ட நிலையில், சில முணுமுணுப்புகள் மண்டப வளாகத்தில் கிளம்பிய பின்னர் ஆண்களுக்கு மட்டும் மதுவுடன் கூடிய தாம்பூலப் பை விநியோகம் செய்யப்பட்டது. இந்த தாம்பூலப் பைகளை வாங்கிய ஆண்கள் திகைப்பில் மூழ்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுவுடன் கூடிய இந்த தாம்பூலப் பையை வழங்கியது உப்பளம் பகுதியைச் சேர்ந்த பிரபல அரசியல் கட்சி பிரமுகர் என்பது தெரியவந்தது. அந்த பிரமுகர் மது பாட்டில்கள் அடங்கிய அட்டைப் பெட்டியை மேசையில் வைத்து அதிலிருந்து மதுபாட்டில் ஒவ்வொன்றாகத் தாம்பூலப் பையில் போட்டுக் கொடுத்த காட்சியைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கலால் சட்டப்படி ஒரு தனி நபர் 4.5 லிட்டர் மதுவும், 9 லிட்டர் பியரும் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் சட்ட விரோதமாகும்.
இதனைத் தொடர்ந்து தனிநபருக்கு அதிக அளவில் மது விநியோகம் செய்யப்பட்ட விதிமுறைகள் தொடர்பாகவும், சமூகச் சீரழிவாக அமைந்த இந்த அறுவறுப்பான செயல் குறித்தும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக, பொதுநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் புதுச்சேரி காலால் துறைக்கும் வந்த புகார்களை அடுத்து மது பாட்டில்களை தாம்பூலப் பையுடன் கொடுத்த, மணமகளின் உறவினரான ராஜ்குமார் மற்றும் மது விநியோகிப்பதை தடுக்க தவறிய திருமண மண்டப உரிமையாளர், மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர் ஆகியோரிடம் கலால் துறையினர் விசாரணை நடத்தினர்.
விதிமீறலில் ஈடுபட்டது உறுதியாகவே, மது பாட்டிலுடன் தாம்பூலப் பை விநியோகித்த உப்பளம் தொகுதி அரசியல் பிரமுகர் ராஜ்குமாருக்கு ரூபாய் 25,000, மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்த தண்டபாணி ஒயின்ஸ் உரிமையாளருக்கு ரூபாய் 10,000, திருமணம் நடைபெற்ற திருமண மண்டப உரிமையாளருக்கு ரூபாய் 5,000 என ரூபாய் 40 ஆயிரம் அபராதம் விதித்து கலால் துறையினர் உத்தரவிட்டனர்.