பாரதியாரின் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு, சர்வதேச பாரதி விழா இன்று நடைபெற்றது. காணொலி வாயிலாக நடந்த இந்த விழாவில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், உரையாற்றிய மோடி, பாரதியாரை இந்திய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் எனவும், பாரதியாரின் முன்னேற்றத்திற்கான வரையறையில் பெண்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தமிழில் வணக்கம் என்று கூறி உரையைத் தொடங்கிய மோடி, விழாவில் பேசியதாவது: சுப்பிரமணிய பாரதியை ஒரு தொழில் அல்லது பரிமாணத்துடன் இணைக்க முடியாது. அவர், கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், மனிதநேயவாதி மற்றும் பல முகங்களைக் கொண்டிருந்தார். ஒருவர் அவரது படைப்புகள், கவிதைகள், தத்துவங்கள் மற்றும் அவரது வாழ்க்கையைக் கண்டு வியக்க மட்டுமே முடியும். பாரதியின் எழுத்துகள் நமக்கு எதிர்காலத்திற்கான பாதையைக் காட்டுகின்றன. இளைய தலைமுறையினர் அவரைப் பின்பற்ற வேண்டும். "அச்சமில்லை அச்சமில்லை" எனப் பாடுகிறார் பாரதி. எவ்வளவு தடைகள் வந்தாலும், இளைஞர்கள் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். பழமையையும், புதுமையையும் இணைக்க விரும்பியவர் பாரதி.
மகாகவி பாரதியாரின் முன்னேற்றம் குறித்த வரையறையில், பெண்களுக்கு முக்கியப் பங்கு இருந்தது. சுதந்திரமான மற்றும் அதிகாரம் மிக்க பெண்கள் என்பது அவரின் மிக முக்கியமான பார்வை. கண்ணில் மக்களைப் பார்க்கும்போது பெண்கள் தலையை நிமிர்த்தி நடக்கவேண்டும் என்று அவர் எழுதினார். அவரின் அந்தப் பார்வையால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். பெண்களுக்குத் தலைமை அதிகாரமளிப்பதை உறுதிப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்கள் அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் கண்ணியத்திற்கு, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 'இனி ஒரு விதி செய்வோம்' எனப் பாடியவர் பாரதி. அவரது பாடல்களை அனைவரும் கேட்டுப் பயன்பெற வேண்டும். இவ்வாறு மோடி, சர்வதேச பாரதி விழாவில் உரையாற்றினார்.