நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (20.05.2024) காலை 07.00 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக முதல் கட்டமாக 28 இடங்களுக்குக் கடந்த 13 ஆம் தேதி 4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பல்வேறு ஊடகங்களுக்கு பிரதமர் மோடி பேட்டிகளை அளித்து வருகிறார். அந்த வகையில் பிரதமர் மோடி பி.டி.ஐ. (P.T.I.) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெறுவோம். ஒடிசாவில் எங்களுக்கு பெரிய தலைவர்கள் யாரும் இல்லை என்று கூறப்பட்டாலும் சட்டபேரவையில் பாஜக இரண்டாவது பெரிய கட்சி என்பதுதான் உண்மை. நான் பிரதமராக ஆக பிறந்தவன் அல்ல. நான் நாட்டிற்கு ஏதாவது செய்ய பிறந்தவன். 2047 ஆம் ஆண்டிற்குள் நாட்டை வளர்சியடைந்த இந்தியாவாக மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம்.
சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராகத்தான் நான் பேசுகிறேன். அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் குறித்து பேசுகிறேன். பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பண்டிட் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று முடிவு செய்தனர். இப்போது நீங்கள் அதிலிருந்து விலகிச் செல்கிறீர்கள். அவற்றை அம்பலப்படுத்துவது எனது பொறுப்பு. பாஜக ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல.
இந்த முறை தென் மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். தென் மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக மக்களவைத் தொகுதிகளை வெல்லும். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணியைப் பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். 100 வயதான எனது தாயார் தனது கடைசி நாட்களை அரசு மருத்துவமனையில்தான் கழித்தார். தவறான நோக்கத்துடன் எந்த முடிவையும் எடுப்பதில்லை என்பதை மக்களிடம் ஏற்கெனவே கூறியிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.