மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் நேற்று (09.12.2019) குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அதன் பிறகு மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அமித்ஷா, அரசியல் சாசனத்தை விரோதமாக குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இயற்றப்படவில்லை என்று கூறினார்.
சுமார் ஒன்பது மணி நேரம் நீடித்த நீண்ட விவாதத்திற்கு பின் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் குடியுரிமை சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மசோதாவின் அனைத்து சிறப்பம்சங்களையும் அமித்ஷா விளக்கியது பாராட்டுக்குரியது என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.