இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 25 மாவட்டங்களில் இரண்டு வாரமாகப் புதிதாக யாருக்கும் கரோனா இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, மகாராஷ்டிராவின் கோண்டியா, சத்தீஸ்கரில் ராஜ்நந்த் கவுன், துர்க், பிலாஸ்பூர், கர்நாடகாவில் தவன்கிரி, குடகு, தும்குரு, உடுப்பி, கோவாவில் தெற்கு கோவா, கேரளாவில் வயநாடு, கோட்டயம், மணிப்பூரில் மேற்கு இம்பால், ஜம்மு- காஷ்மீரில் ரஜோரி, மிசோரமில் மேற்கு அய்ஸ்வால், புதுச்சேரியில் மாஹே, பஞ்சாப்பில் எஸ்பிஎஸ் ஆகிய இடங்களில் புதிதாக கரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.