வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்த்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம், தனது கடன் முழுவதையும் அடைத்துள்ள நிலையில், உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.
கரோனா பரவலால் உலகம் முழுவதும் தொழில்கள் முடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் பல நிறுவனங்கள் இந்த சூழலை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன. ஆனால் இந்த இக்கட்டான நிலையில் அடுத்தடுத்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்த ரிலையன்ஸ் நிறுவனம், தனது மொத்த நிகர கடனையும் அடைத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1,61,035 கோடி நிகர கடன் இருந்தபோது, 2021 ஆம் ஆண்டு மார்ச் 31க்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து கடன்களும் அடைக்கப்படும் என முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த இரு மாதங்களில் மட்டும் 11 வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ.1,15,693.95 கோடி முதலீட்டை ஈர்த்தது ரிலையன்ஸ் நிறுவனம். மேலும், ரிலையன்ஸ் உரிமங்கள் மூலம், ரூ.53,000 கோடி நிதி திரட்டியது இந்நிறுவனம். இந்த நிலையில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே, வாக்குறுதி அளித்ததை போல தனது நிறுவனத்தின் மொத்த நிகர கடனையும் அடைத்துள்ளார் முகேஷ் அம்பானி. இதுமட்டுமல்லாமல், அந்நிய முதலீடுகளால் ரிலையன்ஸ் சந்தை மதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து, போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். போர்ப்ஸ் கணக்கின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 4.9 லட்சம் கோடி ரூபாயாகக் கணக்கிடப்பட்டுள்ளது.