கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டமன்றத்திற்கு நாளை (10.05.2023) சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்றுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
காங்கிரஸ் - பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி அங்கு நிலவுகிறது. அதோடு அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் காங்கிரஸ், பாஜக என இரு தேசிய கட்சிகளுக்கும் கர்நாடகத் தேர்தல் ஒரு வெள்ளோட்டமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்த நிலையில் நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை ஒன்றில், "ஒவ்வொரு கன்னட மக்களின் கனவு எனது சொந்த கனவு போன்றது. உங்கள் தீர்மானம் தான் எனது தீர்மானம். முதலீடு, தொழிற்சாலைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கர்நாடகா மாநிலம் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே கர்நாடகாவை நம்பர் ஒன் ஆக்குவதற்கு பொறுப்புள்ள குடிமக்களாக உங்கள் வாக்கை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்" என பேசி உள்ளார்.