18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.
அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மோடி பேசிய ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மக்களின் நகை, சொத்துக்களைப் பறித்து இஸ்லாமியர்களிடம் தந்து விடுவோம் என்று காங்கிரஸ் எப்போது பேசியது என்று பாஜகவினால் கூற முடியுமா? தனிநபரின் சொத்துக்களையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் எனக் காங்கிரஸ் எப்போது கூறியது? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் எனக் காங்கிரஸ் எப்போது பேசியது? நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே பதவி வகித்த பிரதமர்களை கொஞ்சமாவது மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களில் மோடி அபாண்டமாக பொய் பேசி உள்ளார். இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியை போல் அடாவடியாக பேசியது இல்லை''எனக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.