சிறுமியை கையால் மலம் அள்ள வைத்த கொடூரம்!
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ஆறு வயது சிறுமியை கையால் மலம் அள்ளவைத்த கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம், சாத்தர்பூர் பகுதியில் உள்ளது குந்தோரா கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துவரும் ஆறு வயது சிறுமி தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இவர், கடந்த திங்கள் கிழமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றுள்ளார். இந்தச் சிறுமி திறந்தவெளியில் மலம் கழிப்பதைப் பார்த்த, அந்த வழியே வந்த பப்புசிங் சிறுமியை கையால் மலத்தை அள்ளும்படி மிரட்டியுள்ளார். இதனால், வேறுவழியின்றி அந்தச் சிறுமியும் அதைச் செய்துள்ளார். பப்புசிங் உயர்சாதி என்று சொல்லப்படும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இந்த விஷயம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் சொன்ன பிறகு, அவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால், பப்புசிங் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் சாதி, மத பாகுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
- ச.ப.மதிவாணன்