Skip to main content

பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி!

Published on 03/10/2021 | Edited on 03/10/2021

 

 

Mamata Banerjee wins Bhavanipur bypoll

 

மேற்குவங்கம் மாநிலம், பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த செப்டம்பர் 30- ஆம் தேதி நடைபெற்றது. இதில், 57% வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்த நிலையில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (03/10/2021) காலை 08.00 மணிக்கு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முதலமைச்சரும், தொகுதியின் வேட்பாளருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். 

 

இந்த நிலையில், பா.ஜ.க.வின் வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவாலை விட 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவால் 26,320 வாக்குகளும் பெற்றனர். இந்த வெற்றியால், மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநில முதலமைச்சர் பதவியில் தொடர்வதில் இருந்த சிக்கல் நீங்கியது. 

 

வெற்றியைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றன. 

 

இதனிடையே, தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "வெற்றி பெற உழைத்தக் கட்சித் தொண்டர்களுக்கு நன்றி. நந்திகிராமில் தாம் தோல்வியடைந்தது ஒரு சதி. மற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும். தமக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி" தெரிவித்துள்ளார். 

 

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் மம்தாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

 

மேற்கு வங்கத்தின் சம்சர்கன்ஞ், ஜாங்கிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்