மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையேயும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிவசேனா பாஜகவை விடுத்து வந்தால் தங்களுடன் சேர்த்துக்கொள்ளத் தயார் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
பாஜக - சிவசேனா கூட்டணி 158 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளபோதும், அமைச்சரவை அமைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. அதேநேரம், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 106 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது காங்கிரஸ் சிவசேனா கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனாவுடன் கூட்டணி கிடையாது என ஏற்கனவே அறிவித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பாலேசாகேப் தோரட் சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது தொடர்பாக கட்சித் தலைமையிடம் ஆலோசிக்கப்படும் என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.