தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
அதே சமயம் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தெலுங்கானாவில் நேற்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் பெண்கள், திருநங்கைகள் நாளை (09.12.2023) முதல் அரசுப் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் இல்லை என தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பெண்கள், திருநங்கைகள் பயணிகள் பேருந்து, விரைவுப் பேருந்து என தெலங்கானா மாநில எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக அளித்தியிருந்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்று இரு தினங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.