சட்டப்பேரவை வளாகத்திற்குள் உறுப்பினர்கள் யாரும் எலுமிச்சை பழம் கொண்டுவர கூடாது என கர்நாடகா மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் காட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. குமாரசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் ஆட்சி அமைக்கப்பட்டதிலிருந்து, ஆட்சி கலைப்பு ஏற்படும் சூழல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் கூட இரண்டு எம்.எல்.ஏ க்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இது அந்த அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் சில எம்.எல்.ஏ க்கள் பதவியை ராஜினாமா செய்யலாம் என குமாரசாமிக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் பில்லி, சூனியத்தில் அதிக நம்பிக்கை கொண்ட முதல்வர் குமாரசாமி, தங்களது ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சியினர் சூனியம் வைக்க வாய்ப்புள்ளதாக ரகசிய தகவலை பெற்றுள்ளாராம். இதனையடுத்து சட்டமன்ற வழக்கத்திற்கும் எலுமிச்சை பழம் கொண்டு வர உறுப்பினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், அவைக்குள் வரும் பார்வையாளர்களின் பை, டிபன் பாக்ஸ் ஆகியவற்றை தீவிரமாக சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.
ஆனால் இந்த கெடுபிடியிலும் குமாரசாமியின் சகோதரரும், பொதுப்பணி துறை அமைச்சருமான ரேவண்ணாவுக்கு மட்டும் எலுமிச்சை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வரின் இந்த வினோத உத்தரவுக்கு கர்நாடக எதிர்க்கட்சியினரும், மேலும் சில முற்போக்கு அமைப்பினரும் கடும் எதிரிபை தெரிவித்துள்ளனர்.