கேரள மாநிலத்தை ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. ஆளுநர் மீது அரசு குறை கூறுவதும், அரசு மீது ஆளுநர் குறை கூறுவதும் தொடர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடிய கேரள மாநில சட்டசபையில், ஆளுநர் தனது உரையை முழுவதும் நிறைவு செய்யாமல் 1.15 நிமிடத்தில் விரைவாக முடித்தார். இது சட்டசபையில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இதன் காரணமாக குடியரசு தின விழாவையொட்டி ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை அரசியல் கட்சித் தலைவர்கள் புறக்கணித்தனர்.
இந்த நிலையில், ஆளுநர் கொல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்காகப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலமேல் என்ற பகுதியில் ஆளுநர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, SFI மாணவர் அமைப்பினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது உடனடியாகத் தனது காரை நிறுத்திவிட்டு போராட்டக்காரர்களுடன் நேரடியாக ஆளுநர் ஆரிப் முகமது கான் வாக்குவாதம் செய்தார்.
தொடர்ந்து மாணவர் அமைப்பினர் முழக்கமிட்டதால் அருகே இருந்த டீக்கடையில் அமர்ந்துகொண்டு கறுப்புக்கொடி காட்டி போராட்டம் செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை டீக்கடையை விட்டு வெளியே வரமாட்டேன் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.