உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 45 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 82,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவை பொருத்த வரையில், மராட்டிய மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்து வருகின்றது. தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தென் இந்தியாவில் முதலில் கரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமான கேரளாவில் கரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வருகின்றது. இதுவரை 560 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மூன்று, நான்கு நாட்கள் யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து கேரளாவிற்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும், அவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதாலும் கேரளாவில் மீண்டும் இரட்டை இலக்கத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகின்றது.