கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா சபாநாயகருக்கு நேற்று (18/07/2019) கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தில் இன்று இரவுக்குள் (18/07/2019) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரை அறிவுறுத்திருந்தார். ஆனால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர் அமளியால் இன்று காலை 11.00 மணிக்கு அவையை ஒத்திவைத்தார் துணை சபாநாயகர் கிருஷ்ணா ரெட்டி. நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் இன்றே நடத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் அவையை விட்டு வெளியேறமாட்டோம் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா தனது எம்.எல்.ஏக்களுடன் நேற்று இரவு அவையிலேயே உறங்கினர்.
இந்நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு நேற்று (18/07/2019) கடிதம் அனுப்பினார். அதில் இன்று (19/07/2019) மதியம் 01.30 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கெடு விதித்தார். அதனைத் தொடர்ந்து இன்று கூடிய கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடர்வதால், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் இன்று மாலை 06.00 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்தி முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து சட்டப்பேரவையில் ஆளுநரின் கடிதத்தை வாசித்த முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவது குறித்து சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும். குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் என்னை நிர்பந்தித்துள்ளார். ஆளுநர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவரின் கடிதம் என்னை காயப்படுத்தியுள்ளதாக கூறினார். மேலும் பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக நாங்கள் புகாரளித்த போது ஆளுநருக்கு தெரியவில்லையா? என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தொடர்வதால் இன்று வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் கடிதத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதல்வர் குமாரசாமி மனு. அதே சமயம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அவை செயல்படாது என்பதால், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆட்சியை காப்பாற்ற, சட்டவல்லுனர்கள் உடன் தீவிர ஆலோசனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.