இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நாட்டின் எல்லைப் பகுதிகளை வரையறை செய்வது தொடர்பாகப் பல ஆண்டுகளாகப் பிரச்சனை இருந்து வருகிறது. லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டார் போன்ற இடங்களில் எல்லை பிரச்சனைகள் இருந்து வருகின்றன. சீன அரசு அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பகுதியாக சொந்தம் கொண்டாடி, அவ்வப்போது வரைபடங்களையும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இரு நாடுகளும் தங்களது நாட்டு ராணுவ வீரர்களை அதிகமான எண்ணிக்கையில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எல்லைப் பகுதியான தவாங் செக்டார் பகுதியில் இரு நாடுகளும் தனிப்பட்ட முறையில் வகுத்துள்ள எல்லைப் பகுதியை வரையறை செய்து, இரு நாட்டு ராணுவமும் ரோந்து பணியில் ஈடுபடுவதால் இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. கடந்த 9 ஆம் தேதி இரவு 50 இந்திய ராணுவ வீரர்கள் தவாங் செக்டார் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் சீன ராணுவத்தைச் சேர்ந்த 200 ராணுவ வீரர்கள் தங்களது எல்லைப் பகுதியை விட்டு இந்திய எல்லைப் பகுதியை நோக்கி மரக்கட்டைகள் மற்றும் ஆணிகள் பொருத்திய ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.
இதனைக் கவனித்த இந்திய ராணுவ வீரர்கள் அவர்களைத் தடுக்க முயலும்போது இரு தரப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததை கவனித்த சீன ராணுவத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இரு தரப்புக்கும் இடையே 30 நிமிடம் சண்டை நீடித்துள்ளது. இந்த சண்டையில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன. இந்திய ராணுவ வீரர்கள் 15 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. சம்பவத்திற்குப் பிறகு, ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின் தவாங் செக்டார் பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கவும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்புத் துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது " நாட்டின் ஒரு இன்ச் நிலத்தைக் கூட யாராலும் கைப்பற்ற முடியாது" என்றார்.