Skip to main content

ஆளுநர் பணிகளை தடுத்தால் 7 ஆண்டு சிறை, புதுவைக்கும் பொருந்தும்: கிரண்பேடி அதிரடி

Published on 26/06/2018 | Edited on 26/06/2018
Kiran-Bedi


ஆளுநர் பணிகளை தடுத்தால் 7 ஆண்டு சிறைத்தண்டனை வழிவகை உள்ளது என்பது புதுவைக்கும் பொருந்தும் என்றும் சட்டம் என்பது நாடு முழுவதும் சமமானது தான் என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்லும் ஆளுநர், பல திட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆளுநர் ஆய்வு குறித்து, தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில்,

மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்த ஆளுநருக்கு உரிமை உள்ளது. தமிழக அரசின் எந்த துறையையும் ஆளுநர் இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது. மக்கள் நலனுக்காக இது போன்ற ஆய்வு தொடரும்.

 

 

ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளது. அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், மாநில அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் கடமையும் ஆளுநருக்கு உள்ளது என தமிழக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

இதேபோல், புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், தேவைப்படும்போது வேறு சில தினங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கு அரசியல் கட்சியனர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆளுநர் கிரண்பேடி தனது டிவிட்டர் மூலம் நேற்று வெளியிட்ட பதிவில், கள ஆய்வு தான் சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களை ஆளுநருடன் இணைக்கிறது. உண்மை நிலையை பார்க்கவும், கேட்கவும், உணரவும் செய்கிறது. ஆளுநர் மாளிகைக்கு வரும் புகார்கள் மீது நேரடியாகச் சென்று உண்மையை சரி பார்க்க முடிகிறது.

ஒருவர் மக்களைச் சென்று பார்த்தால் தான் நற்பணிகளை செய்ய முடியும். மக்கள் நம்பிக்கையை சம்பாதிக்க சிறந்த வழி தன்னலமற்ற முறையில் கடமையை செய்வதுதான். கள ஆய்வு மேற்கொள்ளப்படுவதால் பிரச்னைகள் பெரியதாவதற்கு முன்பு தீர்க்கப்படுகிறது. கள ஆய்வும்கூட ஒருவகையில் மக்கள் சேவைதான். மக்கள் பிரச்னைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஆளுநர் பணிகளை தடுத்தல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க சட்டத்தில் வழிவகை உள்ளது என ஆளுநர் மாளிகை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதே சட்டம் நிச்சயமாக புதுவைக்கும் பொருந்தும். நாடு முழுவதும் ஒரே சட்டம் தான். சட்டத்தை யாரும் தவிர்க்க முடியாது என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்