சமூக வலைதளங்கள் மூலம் சாதாரண மனிதர்களின் கண்டுபிடிப்புகள் அவ்வப்போது வெளிக்கொணரப்பட்டு அதற்கான அங்கீகாரங்கள் கிடைக்கப் பெற்று வருகிறது. இந்த நிலையில் அண்மையில் பால்காரர் ஒருவர் ஃபார்முலா ஒன் கார் போன்று கார் ஒன்றை தயாரித்து சாலையில் இயக்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பால்காரர் ஒருவர் அவர் விற்கும் விற்பனைப் பொருட்களை ஃபார்முலா ஒன் கார் போன்று வடிவமைக்கப்பட்ட காரில் வைத்துக் கொண்டு சாலையில் செல்கிறார். 'ரோட்ஸ் ஆஃப் மும்பை' எனும் டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அந்த வீடியோவை மேற்கோள் காட்டியுள்ள ஆனந்த் மகேந்திரா 'இந்த கார் போக்குவரத்து விதிமுறைகளின்படி வடிவமைக்கப்பட்டதா என தெரியவில்லை. ஆனால் மனித ஆசைகளுக்கு கடிவாளம் போட முடியாது' என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த நபரை தான் சந்திக்க விரும்புவதாகவும் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.