பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் காலமானார். 95 வயதான பிரகாஷ் சிங் பாதல் உடல் நலக்குறைவு காரணமாக மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பாதல் உயிரிழந்துள்ளார்.
பாதல் மறைவிற்கு பிரதமர் மோடி, மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவினை அடுத்து 2 நாள் தேசிய துக்க தினமாக கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாதலின் மறைவினை தொடர்ந்து ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மொஹாலியில் பாதல் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்றார். பாதல் மறைவு குறித்து அவர் கூறுகையில், “பிரகாஷ் சிங் பாதல் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். ஏழைகளுக்காகவும் விவசாயிகளுக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பினார். பஞ்சாப் மாநிலத்தில் 20 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அவர் மறைந்த இன்று ஒரு யுகத்தின் முடிவு. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” எனக் கூறினார்.
பாதலின் மறைவு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “பிரகாஷ் சிங் பாதல் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் இந்திய அரசியலின் மகத்தான ஆளுமை மற்றும் நமது தேசத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய குறிப்பிடத்தக்க அரசியல்வாதி ஆவார்” என குறிப்பிட்டுள்ளார்.