சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன. இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டதுடன், உளவுத் துறை அதிகாரி அன்கிட் சர்மா கொலையில் தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்துள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் முகமது தாஹிர் உசேனின் வீடு மற்றும் தொழிற்சாலையில் தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி மாநகராட்சியின் 59-வது வார்டான நேரு விஹார் கவுன்சிலராக முகமது தாஹிர் உசேன், டெல்லி கலவரத்தில் முக்கிய பங்காற்றியதாக குற்றசாட்டுகள் எழுந்தன. ஆனால் தாஹிர் உசேன் இதனை மறுத்த நிலையில், அவரது வீட்டில் தற்போது தடயவியல் நிபுணர்கள் சான்றுகளை திரட்டி வருகின்றனர். இவரது வீட்டுக்கு அருகே உள்ள பாஜக முன்னாள் கவுன்சிலர் மேகக் சிங்கின் குடோனில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்கள் கலவரத்தின்போது தீ வைத்து எரிக்கப்பட்டன. அப்பகுதியைச் சேர்ந்த சிலரின் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தாஹிர் உசேன் வீட்டுக்கு எவ்வித சேதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது வீட்டில் இருந்து பெட்ரோல் குண்டுகள், அமிலம், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து உளவுத் துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், அதிகாரி அன்கிட் சர்மாவை கவுன்சிலர் முகமது தாஹிர் உசேன் தலைமையிலான கும்பல் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து முகமது தாஹிர் உசேன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.