மத்திய பாஜக அரசு கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் மும்பையில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் ஜனாத் பேகம் படேல் என்பவருக்கு அவரது கணவர் இம்தியாஸ் குலாம் படேல் வாட்ஸப் மூலமாக முத்தலாக் கூறியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக ஜனாத் பேகம் மும்பை காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக இம்தியாஸ் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பேசியுள்ள ஜனாத் பேகம், "கடந்த நவம்பர் மாதம் நான் 7 மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது எனது கணவர் வேறு ஒருபெண்ணுடன் வாழ்ந்துகொண்டு எனக்கு வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி வாயிலாக மூன்று முறை தலாக் கூறினார். மேலும் என்னுடன் வாழ மறுத்தார். அவர் தலாக் கூறியதால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் மன உளைச்சலால் குழந்தை குறைமாதத்தில் பிறந்தது. இந்நிலையில் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். நான் புனித குர்-ஆனுக்கு எதிரானவர் இல்லை. ஆனால் நான் உரிமைக்காகப் போராடுகிறேன்" என தெரிவித்துள்ளார்.