அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், 'ஆறு மாதங்களில் ஓய்வு பெற உள்ள எந்த ஒரு அதிகாரிக்கும் தேர்தல் பணி வழங்கக்கூடாது. தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் பணியாற்றக் கூடாது. தேர்தல் அதிகாரிகள் சொந்த மாவட்டங்களில் நியமிக்கப்படவில்லை என்பதை உறுதிச் செய்ய வேண்டும். முந்தைய தேர்தல்களில் ஒழுங்கீன செயல்களில் சிக்கிய அதிகாரிகளைத் தேர்தல் பணிகளில் நியமிக்க வேண்டாம்.
கடந்த 2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் ஒடிஷா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவற்றில் என்னென்ன மாதிரியான அறிவுரைகள் வழங்கப்பட்டதோ, அந்த நடைமுறைகள் வரக்கூடிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் பொருந்தும்' என தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில அரசுகளின் பதவி காலம் நிறைவு பெறும் தேதியையும் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் அடுத்த வருடம் மே மாதம் 24-ஆம் தேதியுடன் (24/05/2020) முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முழு மூச்சாக இறங்கியுள்ளது என்பதற்கு இந்த கடிதம் ஓர் உதாரணம்.