தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர் ராவ் முதல்வராக பொறுப்பு வகித்துவருகிறார். துணிச்சலுக்குப் பெயர் போன அவர், மாநிலத்தில் பல்வேறு அதிரடிகளை அடிக்கடி செய்வார். அதன் ஒருபகுதியாக, இந்தியாவில் முதல் மாநிலமாக கரோனா தொடர்பாக மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்திருந்தார். இதன் மூலம் தெலங்கானா மாநிலம் மீண்டும் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இதற்கிடையே நேற்று (21.06.2021) சித்திபேட் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்ட சந்திரசேகர் ராவ், கட்டடத்தைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் வெங்கடராம ரெட்டி முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "முதல்வர் எனக்கு தந்தையைப் போன்றவர். மரியாதை நிமித்தமாகவே நான் அவரிடம் ஆசி பெற்றேன்" என்று ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.