'கையோடு கை கோர்ப்போம்; புதிய ஒற்றுமை பயணம்' என்ற தலைப்பில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தலைமையில் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி பேசுகையில், “தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள். அதில் விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் நலத் திட்டங்கள், மகளிர் மேம்பாட்டு திட்டம், இளைஞர்கள் வளர்ச்சி போன்றவைகளுக்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த முக்கியமான திட்டம் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம். இதனால் அவர்களது வாழ்க்கை தரம் உயரும் என்று சொன்னார்கள். அந்த வாக்குறுதி இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதற்காக இந்தாண்டு பட்ஜெட்டில் 7,000 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள்.
ஆகவே குடும்ப தலைவிகள் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பெற்று சிறப்பாக தங்களுடைய குடும்பத்தை நடத்துவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு அரசு மத்திய அரசு உதவி இல்லாமல் கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தினாலும் கூட மாநிலத்தினுடைய வருவாயைப் பெருக்கி ஒரு சிறப்பான பட்ஜெட்டை தமிழக முதல்வர் தாக்கல் செய்திருக்கிறார். நான் புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கும் போது எனக்கும் என்னுடைய அமைச்சர்களுக்கும் கிரண்பேடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அப்பொழுது ரங்கசாமி வாயை மூடிக்கொண்டு இருந்தார். குரல் கொடுக்கவில்லை. இப்பொழுது புலம்புகிறார். எனக்கு அதிகாரம் இல்லை; நான் சொல்வதைக் கேட்கமாட்டேன் என்கிறார்கள் என்று புலம்புகிறார்.
நாங்களாவது மாற்று ஆட்சி. மத்தியில் பாஜக ஆட்சி, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி. மத்திய அரசு நாங்கள் சொன்னதற்கு செவி சாய்க்கவில்லை. ஆனால் இப்பொழுது கூட்டணி ஆட்சி. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணியிலிருந்தும் முதலமைச்சர் புலம்புகிறார் என்றால் அவருக்கு தெம்பு கிடையாது திராணி கிடையாது. அதனால் தான் புலம்புகிறார்” என்றார்.