இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லி மட்டுமின்றி இந்தியா முழுவதும் கரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதேநேரத்தில், டெல்லியிலுள்ள அரசியல்வாதிகள் மக்களுக்கு மருந்துகளை அளித்து உதவி செய்தனர். இதில் சிலர் கரோனா சிகிச்சைக்கான மருந்துகளைப் பதுக்குவதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல்வாதிகள் மருந்துகளைப் பதுங்குவது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரிக்கத் துவங்கியுள்ளனர்.
இதில், மற்ற அரசியல்வாதிகளைப் போல பாஜக எம்.பி -யான கம்பீரும் மக்களுக்குத் தேவையான மருந்துகளை விநியோகித்து வந்தார். இந்நிலையில், தொற்றுநோய் காலத்தில் மருந்துகளைப் பதுக்கியதாகக் கம்பீர் உட்பட மூவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருந்து பதுக்கல் குற்றச்சாட்டுத் தொடர்பாகக் கம்பீரிடம் விசாரிக்குமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.
இந்த விசாரணையின்போது நீதிபதிகள், "என்ன விசாரணை நடந்தாலும்,மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலும் இதை விசாரிக்கட்டும். அவர் தேசிய (விளையாட்டு) வீரர். அவர் நல்ல நோக்கத்தோடுதான் செய்திருப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால் செய்த விதம்... அது தெரியாமல் செய்யப்பட்டிருந்தாலும் கூட தவறுதான்" எனக் கூறினர்.
மேலும் நீதிபதிகள், கம்பீர் அறக்கட்டளை 2825 ஃபேபிஃப்ளூ (கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து) அட்டைகளை வங்கியுள்ளதைக் குறிப்பிட்டதோடு, ஒரே ஒரு மருத்துவ பரிந்துரைக்கு எப்படி இவ்வளவு மருந்துகள் வழங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரிக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.