இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.
தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.