இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இதனையடுத்து, பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்துள்ளன. சில மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கியுள்ளன. அதேநேரத்தில் கரோனா இரண்டாவது அலை ஓய்ந்தாலும், மூன்றாவது அலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துவந்தனர்.
மேலும், கரோனா மூன்றாவது அலை ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஏற்படும் என்றும், அக்டோபரில் உச்சமடையும் எனவும் நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.டி.எம்), கரோனா நிலவரம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது.
அந்த அறிக்கையில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், கரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும் என எச்சரித்துள்ளது.