சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசால் இந்தியாவில் 206 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா, டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தலா ஒருவர் என நான்கு பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீனா தனது நட்பு அண்டை நாடுகளுக்கு ஆதரவளித்து உதவுவதற்கு முயற்சிகளைச் செய்து வருவதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "கோவிட் -19 தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து யூரேசியா மற்றும் தெற்காசியாவில் உள்ள 10க்கும் மேற்பட்ட நாடுகளுடன் சீனா இன்று காணொளிக்காட்சி மூலம் கூட்டம் ஒன்றை நடத்துகிறது. இந்த துயரமான நேரத்தில் சீனா தனது அண்டை நட்பு நாடுகளுடன் ஒருமைப்பாட்டுடன் செயல்பட்டு உதவுவதற்கு முயற்சிகளைச் செய்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.