புதுச்சேரி மாநிலத்திலுள்ள 32 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 450 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிப்புரிந்து வருகின்றனர். மேலும் 400- க்கும் மேற்பட்ட ஓய்வூதிதாரர்களும் ஓய்வூதியம் வாங்கி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஒன்பது மாதங்களாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
அதையடுத்து நிலுவையிலுள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் புதுவை அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு துணைதலைவர் ஆல்பர்ட் மார்ட்டின் தலைமையில் நேற்றுமுன்தினம் (04.09.2020) புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று (05.09.2020) ஆசிரியர் தினத்தைப் புறக்கணித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பொறுப்பாளர்கள் T.R .சேஷாசலம், சீத்தாலட்சுமி, வின்சென்ட், கோபால், அருள்ராஜ், சேகர், பெருமாள், பிரிட்டோ, பிரடெரிக், வெனிஸ், நிக்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மார்ட்டின் கென்னடி கூறும்போது, "புதுச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்வி சட்டம்-1987 மற்றும் கல்வி விதிகள் 1996 ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றது. அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அத்தனை சலுகைகளும், அவர்களுக்கு இணையாக நிதி உதவி பெறும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்று இச்சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமீப காலமாக கல்வித்துறையும், அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். தவறான தகவல்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பியதன் காரணமாக மாதந்தோறும் அரசு ஆசிரியர்களுக்கு இணையாக வரவேண்டிய ஊதியம் 9 மாதமாக தடைப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இந்த போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒன்றரை மாத ஊதியம் கோரி அனுப்பப்பட்ட சம்பள கோப்பு துணை நிலை ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது.
கடந்த 20 மாதங்களாக சம்பள கோப்பு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதே வகையில் இந்த கோப்பும் அனுப்பபட்டது. நிதி உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகளிடமிருந்து தேவையான தகவல்களை கேட்டு பெறுவதற்கு ஆளுநருக்கும், அதிகாரிகளுக்கும் முழு உரிமையும், அதிகாரமும் உண்டு. ஆனால், அந்த தகவல்களுக்காக ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பென்சனை நிறுத்தி வைப்பது நியாயமானது அல்ல. நிதி உதவி பெறும் பள்ளிகள் புதுவையை விட்டு எங்கேயும் சென்றுவிடப் போவதில்லை.
எவ்வளவு தகவல்கள் வேண்டுமானாலும் அவர்களிடமிருந்து தாராளமாக பெற்றுக்கொள்ளலாம். அதற்காக ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பென்சனை 9 மாதங்களாக நிறுத்தி வைப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 7- வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இதுவரை 7- வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை.
பல்வேறு தருணங்களில் அரசு சார்பாக 7- வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் உறுதியளித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் LTC, ACP, MACP, Children education allowance, medical reimbursement, new Pension உள்ளிட்ட எதுவும் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் தொடர்ந்து போராடி வருகிறோம். அடிப்படை அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே உடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று துணை நிலை ஆளுநரையும், புதுவை ஆட்சியாளர்களையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.
முன்னதாக ஜென்மராக்கினி மாதா ஆலயம் அருகேயிருந்து ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றவர்களை அஞ்சலகம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதையடுத்து ஆசிரியர்கள் அதே இடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது முதலமைச்சர் நாராயணசாமி போராட்ட குழுவினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இரண்டு, மூன்று நாட்களில் ஆளுநர் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய பதிலோடு மீண்டும் கோப்பு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும். நிலுவையில் உள்ள 9 மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.