Skip to main content

"எட்டு பேரை கொன்றிருக்க வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் பேச்சு; பிரச்சாரம் செய்ய தடை விதித்த தேர்தல் ஆணையம்!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

rahul sinha

 

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், ஐந்தாம் கட்ட தேர்தல் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

நான்காம் கட்ட வாக்குப்பதிவின்போது மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததது. இதில் நான்கு பேர் மத்திய பாதுகாப்பு படைவீர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு முன்பாக ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, "சி.ஆர்.பி.எஃப், வரிசையில் நின்ற வாக்காளர்களைக் கொன்றுள்ளது. அவர்களுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது. தாங்கள் தோற்றுவிட்டோம் என்பது பாஜகவிற்கு தெரியும். எனவே அவர்கள் வாக்காளர்களையும் தொழிலாளர்களையும் கொல்கிறார்கள்" என கூறியிருந்தார்.

 

அதேநேரத்தில் பாஜக மூத்த தலைவரும், ஹப்ரா தொகுதியில் போட்டியிடுபவருமான ராகுல் சின்ஹா, “மத்தியப் படைகள் அவர்களுக்கு (போராட்டக்காரர்களுக்கு) பொருத்தமான பதிலை அளித்துள்ளன. மத்தியப் படைகள் நான்கு பேருக்குப் பதிலாக எட்டு பேரைக் கொன்றிருக்க வேண்டும். அவர்களில் நான்கு பேரை மட்டும் ஏன் கொன்றார்கள் எனக் கேட்டு மத்திய படைக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என பேசினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தது.

 

இதனையடுத்து  தேர்தல் ஆணையம், மிகவும் ஆத்திரமூட்டும் வகையிலான ராகுல் சின்ஹாவின் பேச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில், மத்திய படைகளைத் தூண்டும் விதமாக இருப்பதாக கூறி, ராகுல் சின்ஹா பிரச்சாரம் செய்ய இரண்டுநாள் தடை விதித்துள்ளது. மேலும்  கூச் பெஹார் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷுக்கும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்