நடைபெறவிருக்கும் இறுதிக்கட்டத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இது தொடர்பாக பஞ்சாப் மாநிலம், லூதியானா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு பகவந்த் மான் முதலமைச்சராக இருக்க மாட்டார் என்றும் பஞ்சாப் அரசு கவிழும் என்றும் அமித்ஷா மிரட்டல் விடுத்துள்ளார்.
எங்களிடம் 92 எம்எல்ஏக்கள் உள்ளனர். அரசை எப்படிக் கவிழ்க்க முடியும்? நாட்டில் சர்வாதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஜூன் 4க்குப் பிறகு நீங்கள் ஆட்சி அமைக்க முடியுமா என்பதை அமித்ஷா பார்க்க வேண்டும். உள்துறை அமைச்சர் தனது உரைகளில் பயன்படுத்திய வார்த்தையை நாங்கள் கண்டிக்கிறோம். உள்துறை அமைச்சரும், பிரதமரும் எப்படி பஞ்சாபியர்களை அச்சுறுத்துகிறார்கள் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்வோம்.
உண்மையில், அவர்கள் பஞ்சாபியர்களை வெறுக்கிறார்கள். பாஜக தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை வைத்து மிரட்டு வாங்குவோம் என்று வெளிப்படையாகக் கூறுகிறார்கள். நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன். பஞ்சாப் மக்களை அச்சுறுத்தாதீர்கள். இல்லையெனில், நீங்கள் பஞ்சாப்புக்குள் நுழைவதை அவர்கள் கடினமாக்குவார்கள்.
இதுபோன்ற மொழியை எந்த உள்துறை அமைச்சரும் பயன்படுத்தியதில்லை. அரசாங்கத்தை கவிழ்க்க நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ மூலம் பஞ்சாப் மக்களை பயமுறுத்துவீர்களா? அல்லது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவீர்களா? 5,500 கோடி ஊரக வளர்ச்சி நிதி உட்பட பஞ்சாபின் பங்கு நிதியில் ரூ.9,000 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. வளர்ச்சியில் அரசியல் கூடாது. இது உங்களின் பணம் அல்ல. இது பஞ்சாப் மக்களின் பணம்” என்று கூறினார்