வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பயணத்தை முடித்து கொண்டு நேற்று மாலை ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினர். சந்திரபாபு நாயுடுவை அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் மற்றும் மருமகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தில் அனுமதியின்றி நிறுவப்பட்ட முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டியின் சிலைகளை அகற்ற, அவரது மகனும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து "பிரஜா வேதிகா" இல்லம் இடிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நாயுடு "மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது என்றும், அது மக்களுக்கு சொந்தமானது என்றும் தெரிவித்தார். ஆந்திராவில் உள்ள ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டியின் ஆயிரக்கணக்கான சிலைகளை அகற்ற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூறினார். ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன்மோகன் பதவியேற்ற நாள் முதல் அரசு நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக சட்ட விரோதமாக அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரை அருகில் கட்டப்பட்டிருந்த "பிரஜா வேதிகா" இல்லத்தை இடிக்க முதல்வர் ஜெகன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கட்டத்தை இடிக்கும் பணி இன்று காலை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.