இந்திய நாடளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (29.01.2021) தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் உரை இடம்பெறும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று நாடளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை துவங்கிவைத்துப் பேசிய இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “இந்த இக்கட்டான சூழலிலும் இந்தியா வளர்ந்து வருகிறது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. கரோனாவால் முன்னாள் ஜனாதிபதி பிராணப் முகர்ஜி உள்ளிட்ட 6 எம்பிக்களை இழந்துள்ளோம். சுய சார்புடன் இருப்பதுதான் இப்பொழுது இந்தியாவின் தாரக மந்திரமாக உள்ளது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கடினமான காலத்தில் நல்ல பலனை கொடுத்துள்ளது. நாட்டில் குறு விவசாயம் செய்யும் நிலங்களின் எண்ணிக்கை 65 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. விவசாயச் சட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை. அதேநேரம் வேளாண் சட்டங்கள் தொடர்பாக நீதிமன்றம் எடுக்கும் எந்த முடிவுக்கும் அரசு மதிப்பளிக்கும். சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு அனைவரின் கையிலும் உள்ளது. நமது கிராமப்புற பகுதிகளை வலுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது,” என்றார்.