கடந்த 31 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் அடுத்த நாள்(பிப்ரவரி 1 ஆம் தேதி) 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் மோடி பேசுகையில், ''நாடாளுமன்ற பேச்சு மூலம் பழங்குடியினர் சமுதாயத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் குடியரசுத் தலைவர். விநியோக சங்கிலி மூலம் கரோனா தடுப்பு மருந்து நாடெங்கும் கொண்டு சேர்த்துள்ளோம். டிஜிட்டல் முறையில் பல லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெறுகிறது. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் காண்கின்றனர். கரோனா பரிசோதனை சான்றிதழ் நம் தேசத்தில் உடனடியாக கிடைக்கின்றன. இந்தியா உற்பத்தி நாடாக மாறிக்கொண்டிருப்பதை உலக நாடுகள் கண்டுகொண்டிருக்கின்றன. கரோனா காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு இந்திய உதவி செய்துள்ளது.
நெருக்கடியான சூழ்நிலையிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. தீர்மானம் முதல் வெற்றி வரை குடியரசுத் தலைவரின் உரையில் அனைத்தும் இடம்பெற்றிருந்தன. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது. அவையில் நேற்று ராகுல் பேசும்போது ஒருவித கொதி நிலை காணப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய புரிதலுக்கு ஏற்ப உரையாற்றினர். ஒவ்வொருவரும் தங்களுடைய குணநலனுக்கு ஏற்றவாறு உரையாற்றினார். சிலர் பேசியதை கூர்ந்து கேட்டபோது அவர்களுக்கு திறனும், புரிதலும் குறைவாக இருப்பது தெரிய வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்ற பின்பு பழங்குடியின மக்கள் இடையே நம்பிக்கை, பெருமை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவரின் உரையை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். நேற்று முழக்கமிட்ட எம்பிக்களில் பலர் இன்று வரவில்லை. இந்தியா உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. இந்த அரசின் சாதனை இந்திய மக்களை பெருமையில் ஆழ்த்தி உள்ளது. எதிர்காலத்தை கணித்துக் கூறும் வல்லுநர்களுக்கு இந்தியா மீது அதீத நம்பிக்கை உள்ளது. ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம். சிறந்த முடிவுகளை எடுக்கக் கூடிய, தேச நலனில் அக்கறை கொண்ட நிலையான அரசு தற்போது உள்ளது'' என்றார்.
தொடர்ந்து பிரதமர் உரைக்கு எதிர்த்து குரல் எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள் இறுதியில் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.