ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு இரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரு - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை அடுத்தடுத்து மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டு இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து இரயில்வே துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விபத்திற்கு முதலமைச்சர்கள், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எழுத்தாளர் லதா சரவணன், இந்த கோர விபத்தின் வலியைக் கவிதையாகப் பதிவு செய்திருக்கிறார். அவரது கவிதை;
இரும்பு பெட்டிகளுக்கு நடுவில்...
எத்தனை ஏக்கங்கள் நசுங்கியதோ...
வலியின் கூக்குரல்களுக்கு சில
மணித்துளிகளுக்கு முன்னால்...
நிரப்பப்பட்ட பலூனின் காற்றாய்...
சுவாசம் ஒரு முன்னறிவிப்பினை
அந்த ஆகீரதியான சக்கரங்களுக்கு தரவில்லையோ...
ஆபத்து என்னும் எச்சரிக்கை செய்யும்
இயற்கைப் பறவையின் ஒலி...
தண்டவாளங்களின் தாலாட்டில்
உறங்கிப் போயிருக்க வேண்டும்...
என்றுமே பிரம்மாண்டமாய் விழி விரிக்கும்
வாகனத்தில் இது இறுதிப் பயணம்
என்பதை இறந்தவர்கள் உணர்ந்திருக்கவில்லை...
தந்தையை சந்திக்கப் போகும்
பச்சிளம் பிள்ளையின் அழுகுரல் அடங்கி
வெகு நேரம் ஆகிறது.
கிழிந்து தொங்கும் சதைகளையும்
ஒழுகும் உதிரத்தையும் மறந்து…
எஞ்சிய இதயக்கூட்டில் ஏறியிறங்கும்...
பெருமூச்சு அடங்கும் நேரம் அறியாமல்...
உடன் வந்தவர்களை தேடும் உயிர் பிரியும் ஒரு பயணம்.
அந்த ரயில் கிலுகிலுப்பை சுமந்த
குழந்தையின் குதூகலித்தில் பயணித்தது...
சிதறிய மாணிக்கப்பரல்களைப் போல
தன் உடலைச் சிதைத்துக் கொண்டு...
கொலைகளத்தில்... தனியாய்....
உயிரற்ற உடல்களோடு...
நாசிக்கிழிக்கும் குருதி வாசனையோடு...
ஒரு இறைதூதருக்காய் மீட்பருக்காய்
வெகுநேரம் காத்திருக்கிறது...
ஒளிரும் அலைபேசியின் முகப்பு விளக்குளில்
இருள் படிந்து போயிருப்பதை அறியாமல்…
அழைப்புகளின் மணியோசை அடித்து அடித்து
ஒய்ந்து போகிறது.
காலையில் வந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள்
கண்முன்னே பொய்த்துப்போனதைக் கண்டு
தடம் மாறிய ரயில் பெட்டிகள் கூட மனமுடைந்து
மண்டியிட்டு மன்னிப்புகேட்கிறது.
- லதா சரவணன்