நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.
முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி உள்ளார்.
அதில், நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற வேட்பளராக வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்பு பாஜகவில் இருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.