மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
“திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரியில் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலோடு நடந்தாலும் வெற்றி பெறும். இந்த 20 தொகுதிகளுடைய களப்பணிகளிலே மதிமுக முழுமையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணிக்குழு அமைத்துவிட்டால், திமுகவுக்கு வேலை சுலபமாகிவிடும். இந்த 20 தொகுதிகளில் யார் வேட்பாளர்? தோழமைக் கட்சிகள் போட்டியிடுமா? இதையெல்லாம் திமுக தலைமை தீர்மானிக்கும். அதுகுறித்து பேசுவதற்கு இங்கு நான் வரவில்லை. இந்த 20 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுகவே போட்டியிடுமா? அல்லது தோழமைக் கட்சிகளுக்கு ஒன்றிரண்டு தொகுதிகளை விட்டுக்கொடுக்குமா? என்பதையெல்லாம் திமுக தலைமை முடிவு செய்யும். ஆனால், 20 தொகுதிகளிலும் எங்கும் ஆயத்தப்பணிகளில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும். பெரும் பண வெள்ளத்தை எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. ஓட்டுக்கு ஆயிரமோ, ரெண்டாயிரமோ, ஐயாயிரமோ தரலாம். ஆனால், அவர்கள் எவ்வளவு கொடுத்தாலும் சரி. பர்கூர் தொகுதியில் வீட்டுக்கு ஒரு பசுமாடு கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதா அங்கு தோற்றுப்போனார்.
எங்கள் இயக்க வரலாற்றிலேயே, இப்படி ஒரு தேர்தல் களத்தில், நாங்கள் இதுபோன்று ஆயத்தமானது கிடையாது. பணிகளைத் திட்டமிட்டு செய்துகொண்டிருக்கிறோம். 66000 பூத்துக்களில் உள்ள பணிக்குழுவினருக்கு பேட்ஜ் கொடுக்கப் போகிறோம். தேர்தல் நடக்கும்போது, அந்த பேட்ஜோடுதான் வந்து நிற்பார்கள். மிகத்திட்டமிட்ட பணி. முறையாகச் செய்திருக்கிறோம்.” என்று பேசிவிட்டு, கேள்விகளுடன் காத்திருந்த செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டு அரசியல், கஜா புயல், கவர்னர் பிரச்சனை, சட்டமன்றம் எப்போது கூடப் போகிறது? இப்படி பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதையெல்லாம் நான் சொன்னால், டிவிக்களில் அதைப் போடுவதற்கு இடம் கிடைக்காது. நிறைய கேள்விகளை நீங்க வச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். டிவியில் எனக்கு கொடுக்கிறது 3 நிமிஷம்தான். இதை மட்டும் போடுங்க. இல்லையென்றால் உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்வதைத்தானே டிவியில் போடுவீங்க? இதை எங்கே போடுவீங்க?” என்றவர், தன் மீதான விமர்சனம் குறித்த ஒரு கேள்விக்கு “விமர்சனமே வாழ்க்கை!” என்று சிரித்தார்.
வைகோவுக்கு யார் மீது என்ன கோபமோ? மனதில் இருந்ததை கட்சி நிர்வாகிகளிடம் சாத்தூரில் கொட்டித் தீர்த்துவிட்டார். இதைச் சொல்லியிருக்க வேண்டாமே! பெரிய நியூஸாயிருமே! நான் எவ்வளவு ஆபத்தானவன்ங்கிறத அவங்க தெரிஞ்சிக்கனும். தூரத்தில் இருந்தால் இந்த நெருப்பு குளிரைப் போக்கும். உரசிப் பார்த்தால் இந்த நெருப்பு தீ பிடிக்கும். இதுதான் வைகோ. ஏன் இதைப் பேசுறேன்னா.. பேசணும். ராத்திரியெல்லாம் நான் தூங்கல. என்கிட்ட என்ன இருக்கு. நான் அன்னக்காவடி. என் தாத்தா பெரிய வீட்டைக் கட்டி வச்சிட்டு போயிட்டாரு. அவ்வளவுதான். கொஞ்ச காலமா வீட்டை வெள்ளையடிக்கக்கூட என்கிட்ட ரூபாய் இல்ல. கை சுத்தமா இருக்கிறதுனாலதான்.. என்கூட இவ்வளவு பேர் இருக்காங்க. மனசு ரொம்ப நொந்துபோயி.. ராத்திரியெல்லாம் தூங்காம.. அதனாலதான் இதையெல்லாம் பேசுறேன்.
2006 தேர்தலில் என்கிட்ட ரூபாய் கிடையாது. தூத்துக்குடி மாவட்டத்துல இருந்த திருமாவளவனுக்கு போன் பண்ணி, கலிங்கப்பட்டிக்கு வந்துட்டு போங்கன்னு சொன்னேன். கலிங்கப்பட்டிக்கு வந்தாரு. எனக்கே செலவுக்கு பணம் கிடையாது. மாவட்ட செயலாளர் ஆர்.எம்.எஸ். நொந்துபோய் கிடக்காரு. திருமாவளவனை எங்க அப்பா தங்கின ரூமுக்கு கூட்டிட்டு போயி 30 லட்ச ரூபாயை தூக்கிக் கொடுத்தேன். எலெக்ஷன் செலவுக்கு வச்சிக்கங்கன்னு. எலெக்ஷனுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி போன் பண்ணி.. அண்ணே.. பூத் செலவுக்கே இல்லண்ணே.. எல்லாம் காலி ஆயிருச்சு.. ஏதாவது உதவி பண்ணுனாத்தான் முடியும்னு சொன்னாரு. பத்து பேர்கிட்ட ரெண்டு ரெண்டு லட்சமா கடன் வாங்கி.. 20 லட்ச ரூபாயை 12 மணி நேரத்துல அனுப்பி வச்சேன். இதையெல்லாம் என்னைக்கும் நான் சொன்னது கிடையாது. மனசு நொந்து எரிஞ்சுக்கிட்டிருக்கிறதுனால சொல்லுறேன். வைகோ இந்த தொகுதியில் போட்டி போட்ருவாரோ? நல்லா யூகம் பண்ணுவாங்க பத்திரிக்கைக்காரங்க. ஒருவேளை சாத்தூர்லயே இடைத்தேர்தல்ல நின்னுருவாரோ?
இத பாருய்யா.. 20 தொகுதிலயும் இதே மாதிரிதான் கூட்டம் போடப்போறேன். திமுக தலைமைதான் முடிவு பண்ணும். திமுக வேட்பாளரை நிறுத்தினா இதே வேலையை அவங்களுக்கு செஞ்சுட்டு போறோம். அதனால, அந்தக் கணக்கெல்லாம் போட வேண்டாம். நான் தண்ணில தடம் பார்த்திருவேன். காற்றுல தடம் பார்த்திருவேன். என் தடத்தை எவரும் கண்டுபிடிக்க முடியாது.” என்று அனல் கக்கினார்.