தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய படைகளை அனுப்ப தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கம் மற்றும் ஏற்கெனவே இருக்கும் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று, பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையினர் மீது பதில்த்தாக்குதல் நடத்தவே, அங்கு வன்முறை வெடித்தது. அப்போது, காவல்துறையினர் பொதுமக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இன்றுடன் சேர்த்து இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருந்தது. தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் மத்திய பாதுகாப்பு படையினரை தூத்துக்குடிக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தமிழக காவல்துறையினர் போராட்டக்காரர்களை அடக்க முடியாமல் திணறுவதாகவும், துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்குமாறும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, தூத்துக்குடி நோக்கி துணை ராணுவம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.