எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறையினருக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோடைக்கால முதல் அமர்வில் முன் ஜாமீன் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்றும், நீதிமன்ற நேரம் முடிவடையும் நேரத்தில் கோடைக்கால முதல் அமர்வில் வழக்கை நடத்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுத்தியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வரை கைது செய்ய தடை விதிக்க எஸ்.வி.சேகர் தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு நான் வழக்கமாக உத்தரவிடுவதில்லை என்று நீதிபதி விளக்கம் அளித்துள்ளார். மேலும், வழக்கில் இணைப்பு மனுதாரர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் தன் முகநூல் பக்கத்தில் தரக்குறைவான கருத்தை பகிர்ந்தது தொடர்பாக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டு அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி எஸ்.வி சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 25ம் தேதி அன்று இந்த மனு மீதான விசாரணையில், ஆஜரான அரசு வழக்கறிஞர், இம்மனு தொடர்பாக காவல்துறை தரப்பில் எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஆனால், இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி, இன்றைய விசாரணையில், எஸ்.வி சேகரை காவல்துறை கைது செய்ய தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா.