தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். ராம் சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை பல்கலைக்கழகப் பதிவாளர் இன்று (02.12.2021) வழங்கினார்.
தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் சட்டப் படிப்புக்கு என பிரத்யேகமாக தொடங்கப்பட்ட அரசு சட்டப் பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் மற்றும் சேலம் ஆகிய எட்டு இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன. 2002ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தால் அதன் வளாகத்தில் நிறுவப்பட்ட சீர்மிகு சட்டப் பள்ளியானது, நாட்டில் உள்ள பிற தேசிய சட்டப் பள்ளிகளின் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மூன்று ஆண்டு மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த இளங்கலை சட்டப் படிப்புகள், முதுநிலை மற்றும் முனைவர் படிப்பிற்கான சட்டப் படிப்புகள் உட்பட சட்டம் சம்பந்தப்பட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன.
இந்திய பார் கவுன்சில் (BCI) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆகியவற்றால் இந்தப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கம் (AIU), காமன்வெல்த் பல்கலைக்கழகங்களின் சங்கம், U.K. மற்றும் இந்திய பொது நிர்வாக கழகம், புதுதில்லி ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த நீதிபதிகள் மற்றும் பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் படித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
இத்தகைய தனிச் சிறப்புகள் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞராக டாக்டர். ராம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் நகரைச் சேர்ந்த ராம் சங்கர், கடந்த 2012ஆம் ஆண்டு முதல் டெல்லியில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். சமீபத்தில் சட்டப் படிப்பில், இந்தியாவில் எப்படி உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
குருகிராம் ஜி.டி. கோயங்கா பல்கலைக்கழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் இவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினர்.