மேற்குவங்கத்தில் 'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்.
'அம்பன்' புயல் மேற்கு வங்கத்தின் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், புதன்கிழமை மாலை இந்தப் புயல் கரையைக் கடந்தது. இப்புயல் கரையேறிய போது மேற்குவங்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடும் மழையும் பெய்தது. மணிக்குச் சராசரியாக 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று வீடுகள், மரங்கள், மின்கோபுரங்கள் உள்ளிட்டவற்றைத் தூக்கிவீசியது. மேற்குவங்கக் கடலோரத்தில் 5 மீட்டர் உயரத்திற்குக் கடல் அலைகள் எழுந்தன.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்க மாநிலத்தில் 5 லட்சம் பேரும், ஒடிசா மாநிலத்தில் 1.5 லட்சம் பேரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புயலில் 80 பேர் வரை உயிரிழந்திருப்பதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 'அம்பன்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். இன்று காலை விமானம் மூலம் கொல்கத்தா வந்தடைந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பாபுல் சுப்ரியோ, பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் டெபாஸ்ரீ சவுத்ரி ஆகியோருடன் ஹெலிகாப்டரில் சென்று புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். முன்னதாக கொல்கத்தா விமானநிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று வரவேற்றார்.