வன்னியர் சமூகம் உள்ளிட்ட 108 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தி (எம்.பி.சி.) அவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் அமலில் இருக்கிறது. இதனை நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்!
அந்த வகையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லீம் மற்றும் கிறுஸ்தவர்களும், தாழ்த்தப்பட்டோர் சமூக பட்டியலில் உள்ள அருந்ததியர்களும், ‘எங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் ‘ என போராடினர். இதனைத் தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் முகமாக, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (பி.சி.) முஸ்லீம்களை பி.சி.(எம்) என வகைப்படுத்தி 3.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு தந்தார் கலைஞர். அதேபோல, பி.சி (சி) என கிறுஸ்தவர்களை வகைப்படுத்தி அவர்களுக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். அதேபோல, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் அருந்ததியர்களை எஸ்.சி. (ஏ) என வகைப்படுத்தி 3 சதவீத உள் இடஒதுக்கீடு தந்தார் கலைஞர். ஒரு கட்டத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட உள் இடஒதுக்கீடு வேண்டாம் என அரசிடம் தெர்வித்தது கிறுஸ்துவ சமூகம். அதனால் அவர்களின் இட ஒதுக்கீடு அமலில் இல்லை.
இந்த நிலையில், உள் இடஒதுக்கீடு என்கிற அளவுகோலை முன்னிறுத்தி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு தொடர்ச்சியான கோரிக்கைகளை வைத்து வந்தது வன்னியர் சமூக கூட்டமைப்பு. ஆனால், இதனை நிராகரித்து விட்டது தமிழக அரசு.
இதனால் அரசின் முடிவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வன்னியர் சமூக கூட்டமைப்பு. அந்த வழக்கில், ’’பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும் உள் இடஒதுக்கீடு தந்து அது சட்டமாக நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், அதனைப் பின்பற்றி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள வன்னியர்களை எம்.பி.சி.(வி) என வகைப்படுத்தி உள் இடஒதுக்கீடு கொடுக்க மறுப்பது அநீதியானது ‘’ என வாதாடியது வன்னியர் சமூக கூட்டமைப்பு.
கூட்டமைப்பின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவினை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அனுப்பி கருத்துரு கேட்டது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை. இதனை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொண்டது ஆணையம் !
அந்த விவாதத்தில், சாதிவாரி கணக்கெடுப்புக்காக அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையத்தின் முடிவுகளையும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட அம்பாசங்கர் ஆணையத்தின் பரிந்துரைகளையும் அலசி ஆராயப்பட்டன. இந்த ஆய்வுக்கு பிறகு, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடாக 10.5 சதவீதம் தரலாம் என தமிழக அரசுக்கு தனது கருத்துருவையும் பரிந்துரையையும் அறிக்கையாகத் தந்தது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!
ஆனால், 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இதில் கவனம் செலுத்தினாலும் முடிவு எடுக்கவில்லை. அப்படியே கிடப்பில் கிடந்த இந்த பிரச்சனையை கையில் எடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விக்கிரவண்டி இடத்தேர்தலின் போது, ‘’ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவோம் ’’ என நம்பிக்கைத் தெரிவித்திருந்தார். ஆனால், இதனை அப்போது எதிர்த்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘’ இது சாத்தியமில்லை. போகாத ஊருக்கு ஸ்டாலின் வழி சொல்கிறார் ‘’ என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை அமல் படுத்தாததால் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை வன்னியர் சமூக கூட்டமைப்பினர் தொடர்ந்தனர். அது குறித்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது உயர்நீதிமன்றம்.
இந்த சூழலில்தான், முதல்வர் எடப்பாடியின் ஒப்புதலுக்காக உள் இடஒதுக்கீடு கோப்புகள் கடந்த 6 மாதங்களாக அவரது மேஜையில் கிடக்கிறது. தற்போது இதற்கு எடப்பாடி ஒப்புதல் தந்திருப்பதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வருகிற 24-ந்தேதி சட்டப்பேரவையில் தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தில், வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி முடிவு செய்துள்ளார் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.