பாகிஸ்தான் வசம் இருந்த விங் கமாண்டர் அபிநந்தன் இன்று இரவு 9 மணிக்கு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 75 மணி நேரத்திற்கு பின்னர் பாகிஸ்தானில் இருந்து தாய் மண்ணில் கால் பதித்துள்ளார் அபிநந்தன். மிடுக்கான நடையுடனும், கூர்மையான மீசையுடனும் இந்திய எல்லைக்குள் கம்பீரமாக வந்துவிட்ட அபிநந்தனை அதிகாரிகள், பொதுமக்கள் கைலுக்கி வரவேற்றனர்.
பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதலில் ஈடுபட்டபோது கடந்த 27 ம் தேதி விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார். அபிநந்தனை ஒப்படைக்குமாறு இந்தியா வலியுறூத்தி வந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர், அபிநந்தனை இந்தியாவுக்கு அனுப்புவதாக அறிவித்தார். அதன்படி இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்திய ஆவணங்கள் சோதனை காரணமாக அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இன்று இரவு 9 மணிக்கு அட்டாரி எல்லையில் அபிநந்தனை இருநாடுகளின் முறைப்படி ஒப்படைத்தனர். அபிநந்தன் பத்திரமாக தாயகம் திரும்பியதில் பெரு மகிழ்ச்சி என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அபிநந்தன் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.