நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்குச் சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் 174 கோடி ரூபாய் பணம் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகான மிகப்பெரிய பண பறிமுதல் என கூறப்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். செய்யாத்துரையின் வீடு, அலுவலகம் மட்டுமின்றி அவரது துணை நிறுவனங்கள், ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள், உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 50 இடங்களில் சோதனை செய்யப்பட்டது.
2 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில் 174 கோடி ரூபாய் பணம் மற்றும் 105 கிலோ தங்கம், ஆவணங்கள், முக்கிய தகவல்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்குகள் ஆகியவற்றை வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தை எண்ணி சரிபார்த்து கட்டுகளாக கட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட காட்சி வெளியாகியுள்ளது. செய்யாத்துரையிடம் கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள், ரூபாய் கட்டுகள் குறித்த படமும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அருப்புக்கோட்டையில் வருமான வரித்துறையினரின் சோதனை இன்று 3-வது நாளாக நீடித்து வருகிறது. சென்னை, மதுரை ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் செய்யாத்துரையிடம், வருமான வரித்துறையினர் விசாரித்து வருகிறார்கள். செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களின் 15-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
வங்கிகள் மூலம் நடைபெற்றுள்ள பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து வருமான வரித்துறையினர் பெற்றுள்ளனர். இந்த விசாரணையின் அடிப்படையில் அரசியல் பிரமுகர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.