Skip to main content

கடவுள் நம்பிக்கையிலும் ஜெயலலிதாவை பின்பற்றும் எடப்பாடி! வெற்றியை தருவாரா?  வீட்டுக்கு அனுப்புவாரா?

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வார்த்தைக்கு வார்த்தை 'இது அம்மா வழியில் செயல்படும் ஆட்சி' எனக்கூறி வருவது உலகம் அறிந்த ஒன்று. ஒருபுறம் அம்மா வழியில் ஆட்சி என்று சொல்லிக்கொண்டே, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எதையெல்லாம் எதிர்த்தாரோ அதற்கெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்பு அளித்தவர் எடப்பாடி.


உதாரணமாக, ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்த நீட் தேர்வு, உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி வரி ஆகிய திட்டங்களை எல்லாம் எடப்பாடி தாராளமாகவே தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தார். 

e


இப்படி மூச்சுக்கு முந்நூறு தடவை அம்மா வழியிலான அரசு என்று சொல்லிக்கொண்டாலும், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவை அச்சர சுத்தமாக பின்பற்றி வர்றாங்கனு சொல்லலாம். அது எதுனு கேட்கறீங்களா? சொல்றேன்.


பார்ப்பன சமூகத்தில் பிறந்து இருந்தாலும், சினிமாவில் உச்சத்தில் இருந்த வரையிலும் ஜெயலலிதாவிடம் கடவுள், ஜோதிடம் போன்ற மூட நம்பிக்கைகளில் எல்லாம் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், 1982ம் ஆண்டுக்குப் பிறகு, அவர் அதிமுகவில் சேர்ந்த பிறகு, மெல்ல மெல்ல அவரிடமும் ஜோதிடம், ஜாதகம் மாதிரியான விஷயங்களிலும் நம்பிக்கை ஏற்படுது.


அதுக்கு ரெண்டு காரணம் சொல்லப்படுது. 

 

e


அதிமுக நிறுவனத் தலைவரான எம்ஜிஆருக்கு ஜோதிடத்திலும், கைரேகை சாஸ்திரத்திலும் எப்போதும் அபார நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையால் ஒரு கட்டத்தில் அவரே கைரேகை பார்க்கக்கூட கத்துக்கிட்டார்னா பாருங்களேன். அவருக்கு நெருக்கமான பலருக்கு கைரேகை பார்த்து பலன்களும் சொல்லியிருக்கார். இதையெல்லாம் பக்கத்துல இருந்து பார்த்த ஜெயலலிதாவுக்கும் கைரேகை, ஜோதிடங்களின் மீது நம்பிக்கை துளிர்விட்டுச்சு. 


அந்த நேரத்துல ஜெயலலிதாவிடம் பணிப்பெண்ணாக சேர்ந்த சசிகலாவுக்கு எப்போதும் கடவுள், மாந்திரீகம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. அவரும் ஜெயலலிதாவிடம் இதைப்பற்றியெல்லாம் சொல்லி, அவர் மனதில் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையை வளர்த்தெடுத்தார். மாந்திரீகம், யாகம், பூஜை புனஸ்காரங்கள்னு ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து செய்த வேலைகள் ஏராளம்.


சரி. இப்போது நமக்கு எதுக்கு இதெல்லாம். நாம எடப்பாடிய பத்தி பேசுவோம்.

 

e


எடப்பாடி பழனிசாமி தன்னோட கையில கலர் கலரா நிறைய கயிறுகள் கட்டியிருக்கறத நீங்கள் எல்லாம் கவனிச்சிருக்கலாம். வெள்ளை சட்டை வெள்ளை வேட்டிய மாத்திட்டு, காவி சட்டை காவி வேட்டி கட்டினாருனா அவரு கட்டியிருக்கற கயிருக்கும் உடைக்கும் அப்படியே சோட்டாணிக்கரை மாந்திரீகர் மாதிரியே இருப்பார்னு அவரோட சொந்த ஊர்லயே பேசிக்கிறாங்கனா பாருங்களேன்.


அந்த அளவுக்கு கடவுள், பூஜை, ஜோதிடம் மாதிரியான இத்யாதிகள் மேல அபார நம்பிக்கை எடப்பாடியாருக்கு உண்டு. இது போதாதுனு, சேலம் மாவட்டத்துல கருமந்துறைனு ஒரு ஊரு இருக்கு. பழங்குடியின மக்கள் வசிக்கிற மலைப்பகுதி. கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்குள்ள வருது. அந்த ஊர்ல வெற்றி விநாயகர் கோயில்னு ஒரு கோயில் இருக்கு. உள்ளூர் மக்கள் அந்த கோயிலை ஒண்ணும் பெரிசா கண்டுக்கிடாமத்தான் இருந்தாங்க.


ஆனால், எடப்பாடியார் பண்ணின புரமோஷன் வேலைகளால இப்போது அந்த கோயில் திடீர்னு ஃபேமஸ் ஆயிடுச்சுனா பாருங்களேன். 


கடந்த 2011ல ஏற்காடு எம்எல்ஏவாக இருந்த பெருமாள் திடீரென்று இறந்துட்டதால அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிச்சாங்க. டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடந்துச்சு. அந்த தொகுதிக்கு அப்போது பொறுப்பாளராக இருந்தது நம்ம எடப்பாடியார்தான். அப்போதுதான் முதல்முதலாக கருமந்துறையில் உள்ள வெற்றி விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு அந்த பகுதியில பிரச்சாரத்தை ஆரம்பிச்சாருங்க.


அவரோட நேரமோ என்னவோ... ஏற்காடு இடைத்தேர்தலில் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அபார வெற்றி அடைஞ்சது. திமுக வேட்பாளர் மாறனை 78116 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் அதிமுக வேட்பாளர் சரோஜா. அவர்தான், இறந்துபோன எம்எல்ஏ பெருமாளோட மனைவி. அந்த இடைத்தேர்தல் இன்னொரு அதிசயமும் நடந்துச்சு. அதாவது இடைத்தேர்தல் வரலாற்றிலேயே முதல்முதலாக 90 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துச்சு.


இதனால எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவோட குட்புக்குல நிரந்தரமாக இடம் பிடிச்சாரு. இது எல்லாமே கருமந்துறை வெற்றி விநாயகரோடு அருளால்தான் நடந்துச்சுனு எடப்பாடியும் நம்பினாரு. அந்தக் கோயில் மேல அவருக்கு இன்னும் நம்பிக்கை அதிகரிச்சுச்சு. அது எப்போது எப்படினு கேட்கறீங்களா...? அதையும் சொல்றேன்...


கடந்த 2016 சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சேலம் மாவட்ட அதிமுக செயலாளராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கற எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளையும் ஜெயிச்சுக் கொடுத்துடணும்னு அதிமுக தலைமை ஸ்டிரிக்ட்டா உத்தரவு போட்டுருந்துச்சு. ஏற்காடு இடைத்தேர்தல் செண்டிமென்டை மனசுல வெச்சிருந்த எடப்பாடி, ரெண்டாவது முறையாக கருமந்துறைக்கு நேரில் சென்று வெற்றி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார்.


அதன்பிறகுதான் அவர் தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கினார். 2016 சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெறச்செய்தார் எடப்பாடி. இதனால ஜெயலலிதாகிட்ட எடப்பாடிக்கு மறுபடியும் நல்ல பேரு கிடைச்சது. இதுக்கு அப்புறம், வெற்றி விநாயகர் மேல எடப்பாடிக்கு மேலும் நம்பிக்கையும் அதிகமாச்சு.  


அதே செண்டிமென்டுலதான் இப்போது, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னாடியும் மூன்றாவது முறையாக கருமந்துறை வெற்றி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்திருக்காரு எடப்பாடி. மார்ச் 22ம் தேதி தனது படை பரிவாரங்களுடன் அந்த கோயிலுக்குப்போன எடப்பாடி, கோயில் வாசலில் டமார்னு  பெரிய சூறைத்தேங்காய் உடைச்சி வழிபட்டாருங்க. 


கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷூக்குதான் அவர் முதன்முதலில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதுக்கு முன்னாடி தேமுதிக வேட்பாளர், சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் கேஆர்எஸ். சரவணன், அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கெல்லாம் வெற்றி விநாயகர் கோயில் பிரசாதத்தை முதல்வரே கொடுத்தார். அவர்களும் பயபக்தியோட பிரசாதத்தை நெற்றியில் பூசிக்கிட்டு, பிரச்சாரத்துக்கு கிளம்பினாங்க.


இப்படி எடப்பாடி மூன்றாவது முறையாக வெற்றி விநாயகர் கோயிலுக்குப் போன பிறகுதான், கருமந்துறையில் மட்டுமில்லாம, வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் மத்தியிலும் அந்த கோயில் பிரபலமாயிடுச்சு. இப்போது தினமும் வெற்றி விநாயகர் கோயில் கூட்டம் அள்ளுதாம். 


இந்த கோயில் பத்தி எடப்பாடிக்கு எப்படி தெரிஞ்சதுங்கறதுதான் உங்களோட அடுத்த கேள்வி. இவ்வளவு சொன்னா நாம அதை சொல்ல மாட்டோமா? 


சேலம் மாவட்டத்துல நிழல் முதல்வர்னு சொல்லப்படுற இளங்கோவன் இருக்காரே... அதாங்க... புத்திரகவுண்டன்பாளையத்துக்காரரு. மறுபடியும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவராக ஆகியிருக்காரே அதே இளங்கோவனைத்தான் சொல்றேன். அவரு, ஏற்கனவே சிலமுறை கருமந்துறை வெற்றி விநாயகர் கோயிலுக்குப் போய்ட்டு ஏதோ பர்சனலா சில வேண்டுதல் வெச்சிருந்தாராம். அதெல்லாம் அடுத்தடுத்து சக்சஸ் ஆகிட்டதால, அதே கோயிலுக்கு முதல்வர் எடப்பாடியாரையும் கூட்டிட்டுப் போயிருக்காப்ல. அப்படித்தான் எடப்பாடிக்கு, வெற்றி விநாயகரோட தரிசனம் கிடைச்சதுனு ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கிறாங்க. 

 

e


புதுச்சேரி முதல்வராக இருந்த ரங்கசாமி, சேலம் சூரமங்கலத்துல இருக்கற அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு அடிக்கடி வந்து போவார். பலமுறை அவர் புதுச்சேரில இருந்து புல்லட் வாகனத்திலேயேகூட வந்திருக்காரு. அவர் அடிக்கடி வந்துட்டுப் போன பிறகுதான் அப்பா பைத்தியம் சாமி கோயில் சேலத்துல ரொம்பவே பிரபலம் ஆச்சுங்க.


இப்போ, முதல்வர் எடப்பாடியார் அடிக்கடி வெற்றி விநாயகர் கோயிலுக்கு போய் வழிபட்டுட்டு வந்ததுக்குப் பிறகுதான் அந்த கோயில் ரொம்பவும் பிரபலமாகியிருக்கு. 


ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, பாஜகவோட தமிழர் விரோத போக்குனு அல்லோகலப்பட்டுக்கிட்டு இருக்கற நேரத்துல, எடப்பாடிக்கு வெற்றி விநாயகர் மறுபடியும் வெற்றியைத் தருவாரா இல்ல... ஒரேயடியாக வீட்டுக்கு அனுப்புவாரானு மே 23ம் தேதி தெரிஞ்சுடும்.

  


 


 

சார்ந்த செய்திகள்