130 ஆண்டு கால வரலாறு கொண்ட, நாட்டின் முதலாவதும் முதன்மையானதுமான டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை டெல்லியின் சதி மற்றும் சூழ்ச்சியால் இடமாற்றம் செய்ய முயல்வதா? என்று கேள்வி எழுப்பி, இடமாற்றத்தை எதிர்ப்பது மாணவர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகமும்தான் என்றே எச்சரிக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்.
இது குறித்த அவரது அறிக்கை: ’’மருத்துவமனைகளுடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகளும் அமைக்கப்பட்டிருப்பது போல்தான் உயர் நீதிமன்றத்துடன் இணைந்து சென்னையில் அரசு சட்டக் கல்லூரியும் அமைக்கப்பட்டது. இதனால் அந்தத் துறைகள் சிறப்படைந்திருப்பது கண்கூடு.
இதைப் பொறுக்கமாட்டாமல் அந்தத் துறைகளைச் சீரழிக்கப் பார்க்கிறது டெல்லி.
‘நீட்’ தேர்வைத் திணித்து மருத்துவர்களும், நீதித் துறையில் தமிழையும் இட ஒதுக்கீட்டையும் மறுத்து சட்ட அறிஞர்களும் தமிழ்நாட்டில் உருவாகவிடாமல் தடுக்கிறது டெல்லி.
இந்த இழிசெயலின் தொடர்ச்சியாகத்தான் 130 ஆண்டு கால வரலாறு கொண்ட, நாட்டின் முதலாவதும் முதன்மையானதுமான சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்தே அப்புறப்படுத்திவிடப் பார்க்கிறது.
அதற்கு மாற்றாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலைக்கு ஒரு சட்டக் கல்லூரி எனப் படம் காட்டப்படுகிறது.
இதை ஊடகத்தில் செய்தியாக வெளியிட்டு, நரி வாலை விட்டு ஆழம் பார்ப்பது போல் நோட்டம் பார்க்கப்படுகிறது.
இந்தச் சதி மற்றும் சூழ்ச்சி, பட்டறிவும் சட்ட அறிவும் கொண்ட தமிழ் மாணவர்களுக்கு எட்டாமல் எப்படி? அதனால்தான் இந்தப் பொல்லாத்தனத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்.
சட்டக் கல்லூரி இடமாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள மற்ற சட்டக் கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் போராடும் அவர்கள் மீது காவல்துறையை ஏவி அடக்க முற்படுகிறது அதிமுக அரசு.
இதை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இது நியாயமா, நீதியா என முதல்வர் பழனிச்சாமியையே கேட்கிறது.
போராடும் சட்டக் கல்லூரி மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்குப் பக்கபலமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகமுமே இருப்பதை உறுதிப்படுத்தினோம்.
சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற சதி மற்றும் சூழ்ச்சி வலை 2008ஆம் ஆண்டிலேயே பின்னப்பட்டு அதற்கு முகாந்திரமாக சட்டக் கல்லூரி மாணவர்களிடையே பயங்கரமான வன்முறை மோதலையும் உருவாக்கி அரங்கேற்றினர்.
ஆனால் டெல்லியின் இந்தக் கயமைத்தனத்தை தமிழக-புதுவை நீதித்துறையே ஒருமித்துக் கண்டித்தது. இப்போது மோடியின் ஒன்றிய பாஜக அரசு தன் பினாமி அதிமுக அரசை வைத்து இதைச் செய்துவிடத் துடிக்கிறது.
அதனால், சட்டக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட அந்த மோதல் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சண்முகம் ஆணையம்தான் இந்த இடமாற்றத்தைப் பரிந்துரைத்ததாகக் கதைவிடுகிறது தமிழ்நாடு சட்டக் கல்விப் பணி இயக்ககம்.
ஆனால் 2009இல் தாக்கல் செய்த நீதிபதி சண்முகம் ஆணைய அறிக்கை அப்படி எதையும் கூறவில்லை.
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலிருந்து இளநிலை படிப்பை மட்டும் எடுத்து, அந்த இளநிலை சட்டப்படிப்புக்கான மூன்று புதிய கல்லூரிகளை சென்னை நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அமைக்க வேண்டும் என்றுதான் கூறியது நீதிபதி சண்முகம் ஆணையம்.
அப்படியிருக்க, பொய்யையும் புரட்டையும் கூறி டெல்லியின் ஏவலராகக் கேவலமான காரியத்தில் இறங்குவதேன்?
உண்மையில், பொய், புரட்டு மற்றும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் பாஜகவுக்கே கைவந்த கலை. அதனுடன் கைகோர்த்த தோஷம், அதிமுகவுக்கும் அது தொற்றிக்கொண்டதோ என்னவோ?
அதனால்தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே முதலுக்கே மோசமாகும் காரியத்தைக் கூட செய்யத் துணிகிறது அதிமுக அரசு.
பாஜகவை நம்பி சொந்தத் தமிழ்மக்களுக்கெதிரான காரியங்களைச் செய்தால், தமிழ்மக்களல்ல, அதிமுகதான் அதனால் மோசம் போகவேண்டிவரும் என்று எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
எனவே டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இடமாற்றத்தை உடனடியாகக் கைவிடுவதுடன், போராடும் மாணவர்களை அழைத்து அவர்களிடமும் இதனை உறுதிப்படுத்துமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.’’