ராஜஸ்தானில் அம்பேத்கர் சிலையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றபோது, அங்கு சி.பி.எம். ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டிருந்த இரண்டு லெனின் சிலைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் பெரியார் சிலை, கேரளாவில் காந்தி சிலை, மேற்கு வங்கம் மாநிலத்தில் பா.ஜ.க. தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜீயின் சிலை, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அம்பேத்கர் சிலை என வரிசையாக அரசியல் மற்றும் சமூக சீர்திருத்த தலைவர்களின் சிலைகள் உடைக்கப்பட்டன. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் இந்த சிலை அரசியல் இன்னமும் முடிவடைந்ததாக தெரியவில்லை.
இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலம் அக்ரோல் பகுதியில் நிறுவப்பட்டிருந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என புகழப்படும், டாக்டர். அம்பேத்கரின் சிலையில் உள்ள தலைப்பகுதியை அடையாளம் தெரியாத நபர்கள் துண்டித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
நேற்று, நாங்கள் அம்பேத்கர் காட்டிய வழியில் நாங்கள் நடக்கிறோம். எங்கள் ஆட்சியைப் போல் அம்பேத்கரின் புகழை வேறெந்த ஆட்சியும் நிலைநாட்டியதில்லை என பிரதமர் மோடி பேசியிருந்தார். ஆனால், அம்பேத்கர் சிலை மீதான தாக்குதல்கள் குறைந்தபாடில்லை.