ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் என்றாலும், ஒரு இடைத் தேர்தலுக்குரிய அத்தனை வித்தை களுடனும் விறுவிறுப்புடனும் நடந்து முடிந்திருக்கிறது வேலூர் எம்.பி. தொகுதியின் தேர்தல். மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி என இரண்டு ஆளும் கட்சிகளின் அதிகார பலத்தையும் மீறி, பெரும்பாடுபட்டு 8,146 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருக்கிறார் தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்த்.
மே மாதம் நடந்த எம்.பி. தேர்தலில் 22 தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றியை அறுவடை செய்திருந்தது தி.மு.க. அதே போல் இப்போது வேலூர் தொகுதியிலும் வெற்றி பெறலாம் என நினைத்திருந்தது. அது நடக் காததால், "என்னத்த ஜெயிச்சு, என்னத்த பண்ண' என கதிர் ஆனந்தின் அப்பாவும் தி.மு.க.வின் பொரு ளாளருமான துரைமுருகனை புலம்ப வைத்துவிட்டது. வேலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலரிட மும் இதுபற்றிக் கேட்டோம். தி.மு.க. ஆதரவு ஓட்டு கள்“முழுசா விழலைன்னுதான் சொல்லணும். அதுக்குக் காரணம் துரைருகன்தான். கலைஞர் இருந்த போதும் சரி, இப்போது தளபதி தலைவராக இருக் கும்போதும் சரி, நிர்வாகிகளும் தொண்டர்களும் தலைமைக்கு கொடுக்கும் மரியாதை மொத்தமும் தனக்குத் தான்னு நினைச்சு நிர்வாகிகளையும் தொண்டர்களையும் மதிக்கவே மாட்டாரு துரைமுருகன்.
பாக்கெட்ல இருந்து பத்து பைசாவை எடுத்து கட்சிக்காரங்களுக்குச் செலவு பண்ண ணும்னா துரைமுருகனுக்கு வேப்பங்காயா கசக்கும். எல்லா மாவட்டத்திலிருந்தும் நிர்வாகிகள் வந்து வேலூரில் தங்கி, சொந்தக் காசை செலவழித்து வேலை பார்த்தார்கள். அவர்கள் எங்கே தங்கியிருக்காங்க, சாப்பாடு வசதியெல்லாம் எப்படின்னு என்னைக்காவது கேட்டிருப்பாரா? இந்த மாவட்ட நிர்வாகிகளின் நிலைமை அதைவிட மோசம். சீட்டு கேட்பவர்களிடம் அறிவாலயத்தில் நேர்காணல் நடக்கும் போது, "சீட்டு கேக்குறியே எவ்வளவு செலவு செய்வே'ன்னு இவர்தான் கேட்பார். பணம் இல்லைன்னு சொன்னா... "அப்புறம் எதுக்குய்யா சீட்டு கேட்குறே'ன்னு நக்கலடிப்பார். இப்ப அவரு மகனை நிப்பாட்டிட்டு காசு கொடுக்கமாட்டேன்னா என்ன அர்த்தம்'' என ரொம்பவே கொந்தளித்தார்கள்.
இன்னும் சில நிர்வாகிகளோ வேறொரு கோணத்தில் பேசினார்கள். சென்னை இராயப் பேட்டையில் நடந்த தலைவர் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது "மன்னன் ராஜராஜ சோழன் அரண்மனையையும் கட்டினான், பெருவுடையார் கோவி லையும் கட்டினான். காலப்போக்கில் அரண்மனை அழிந்துவிட்டது, பெருவுடையார் கோவில் இன்றும் நிலைத்திருக்கிறது. காரணம் அரண்மனை என்பது தனிச் சொத்து, கோவில் என்பது மக்கள் சொத்து. எனவே தளபதி அவர்களே தி.மு.க. என்பது மக்கள் இயக்கம், இதை தொண்டர்கள் கட்டிக் காப்பாற்றுவார்கள்' என்றார். அதைப்போல்தான் தொண்டர்கள் எப் போதும் கட்சியின் மீது மாறாத பற்றும் பாசமும் வைத்திருக்கிறார்கள். ஆனால் துரைமுருகன் போன்ற ராஜ நினைப்புக்காரர்களுக்கு இப்படித் தான் பதில் சொல்வார்கள். பொன்முடியும் இதே நினைப்பில்தான் இருப்பார். ஆனால் மகனுக்கு எம்.பி.சீட் கிடைத்ததும் நிர்வாகிகளின் தோளில் கைபோட்டார், கைக்காசை தாராளமாக வாரி இறைத்தார்'' என்கிறார்கள்.
துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் தரப்பில் நாம் விசாரித்த போது, ""சொந்த மாவட்ட நிர்வாகிகளே சாதிப் பாசத்தில் ஏ.சி.எஸ்.சுக்கு வேலை பார்த்தார்கள். "இஸ்லாமிய வாக்குகளும் தலித் வாக்குகளும் கை கொடுக்கலேன்னா நிலைமை மோசமாகியிருக்கும்' என புலம்பிக் கொண்டிருக்கிறார் துரைமுருகன்'' என்கிறார்கள். அதே நேரத்தில் ஏ.சி. எஸ். தரப்பிலோ விரக்தி அதிகமாகவே தெரிகிறது. மே மாதம் தேர்தல் ரத்தான போது 130, இப்போது சுமார் 70 என "சி'க்களில் செலவழித்தும் அ.தி.மு.க.வின் ஒரு தரப்பு துரோகத்தால் குறைந்த ஓட்டில் தோற்றுவிட்டோமே என ரொம்பவே வேதனைப்படுகிறாராம் ஏ.சி.எஸ். ஓட்டு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் லீடிங் என்றதும் உற்சாகமானார் ஏ.சி.எஸ். ஆனால் நிலைமை மாறியதும் ராணிப்பேட்டையில், தான் தங்கியிருந்த ஓட்டலிலிருந்து கிளம்பி சென்னைக்குப் போய்விட்டாராம்.
அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரோ, ஏ.சி.எஸ். தாராளமா செலவு பண்ணத்தான் செஞ்சாரு. ஆனால் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துக் கிட்டு, மற்றவர்களை நெருங்கவிடல'' என்கிறார்கள். ஏ.சி.எஸ்.சுக்கு தேர்தல் பணியாற்றிய ரஜினி மக்கள் மன்றத்தினரும் அப்செட்டில் உள்ளனர். 18-ஆம் தேதி வாணியம்பாடியில் நடக்கவுள்ள நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசுகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அந்தக் கூட்டத்திற்கு முன்பாக வேலூர் தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரணை இருக்கும் என்கிறார்கள்.