தகுதிநீக்கத்தை எதிர்த்த வழக்கை வாபஸ்பெறுகிறேன் என்று மூன்றாவது நீதிபதியிடம் மனுக்கொடுக்கலாம். அவர் அதை ஏற்க மறுத்தால் அவரோடு மல்லுக்கட்டவா முடியும்? கடவுள் விட்ட வழி என்று போகவேண்டியதுதான் என நக்கீரன் இணையதளத்திடம் தங்கத்தமிழ்செல்வன் கூறினார்.
குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறது என்றும், தினகரனை தவிர்த்து 18 பேரும் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்றும் ஜெயக்குமார் கூறுகிறார். 18 பேரும் வந்தால் வரவேற்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மொத்தத்தில் தினகரன் அணியில் மிகப்பெரிய கருத்து மோதல் நிலவுவதாக செய்திகள் உலா வருகிறது. தினகரன் அணியில் என்னதான் நடக்கிறது?
நக்கீரன் இணையதளத்திடம் பகிர்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்:-
18 பேரின் தகுதி நீக்க வழக்கில் கோர்ட் பாதகமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதனை பொதுமக்கள் புரிந்து கொண்டார்கள். 3வது நீதிபதியின் தீர்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை. எனது தொகுதியில் எம்எல்ஏ இல்லாமல் இருப்பதால் பல பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. அதனால் எனது வழக்கை வாபஸ் பெறுகிறேன். இடைத்தேர்தல் வந்தால் ஒரு எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தலாம் என்பதற்காகவே வாபஸ் பெறுகிறேன்.
இடைத்தேர்தல் வருவதை தினகரன் விரும்புகிறாரா?
எதற்காக வாபஸ் வாங்குகிறேன் என்று எனது கருத்தை சொன்னபோது அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
தினகரன் அணியில் கருத்து வேறுபாடு இருக்கிறதா?
எங்கள் அணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எந்த குழப்பமும் இல்லை. தினகரன் சம்மதத்தின் பேரில்தான் வழக்கை வாபஸ் வாங்குகிறேன். வாபஸ் பெறுவதற்கான மனுவை 3வது நீதிபதியிடம் கொடுக்கலாம் என்று சொன்னதே தினகரன்தான்.
ஒருவேளை அந்த வாபஸ் கோரிக்கையை கோர்ட் ஏற்கவில்லை என்றால்?
நான் என்ன செய்ய முடியும். நான் என் கடமையைத்தான் செய்ய முடியும். கோர்ட்டுக்கிட்ட மல்லுக்கட்டவா முடியும். கடவுள் விட்ட வழி என்று போக வேண்டியதுதான்.
உங்கள் மனுவை வாபஸ் பெறுவதற்கு நீதிபதி அனுமதித்தால், 17 பேரும் வழக்கை வாபஸ் பெறுவார்களா?
அதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் வழக்கை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
18 பேரும் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று ஜெயக்குமாரும், எடப்பாடி பழனிசாமியும் அழைப்பு விடுத்துள்ளார்களே? திவாகரன் அணியினரும் உங்களை புகழ்ந்து பேசுகிறார்களே?
அவர்கள் எங்களை ஏற்றுக்கொண்டாலும் தகுதி நீக்கம் தகுதி நீக்கம்தான். ஒருவேளை எங்களை சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்ல வைக்கலாம் என்று கனவு காணலாம். நாங்கள் 18 பேரும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கோம். ஒன்பது மாதம் நாங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டோம். எடப்பாடி பழனிசாமி பக்கம் போக மாட்டோம். திவாகரனுக்கு இதில் சம்மந்தமே கிடையாது.
18 பேரை இழுக்க பண பேரம் நடப்பதாக கூறப்படுகிறதே?
அதெல்லாம் தவறான செய்திகள். அந்த மாதிரி எதுவும் கிடையாது.